திருவாரூர் மாவட்டம் பெரும்புகலூர், இளவங்கார்குடி ஊராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 600- க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்.30) திருவாரூர் முழுவதும் பெய்து வந்த தொடர் கனமழையால், இரண்டு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்து நல்ல மகசூல் வரும் என்று எதிர்ப்பார்த்து அறுவடைக்கு தயாராக இருந்தனர்.
ஆனால் தற்போது வயலில் சாய்ந்த நெற்பயிர்கள் முளைக்க தொடங்கியுள்ளதால் இயந்திரத்தை விட்டு அறுவடை செய்ய முடியாமலும், ஆட்களைக் கொண்டு அறுவடை செய்ய முடியாமலும் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.
மேலும் வடிகால் வசதி இல்லாததே இந்த பாதிப்புக்கு காரணம் என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனிடையே உடனடியாக வடிகால் வாய்க்கால்களை சீரமைத்து தரவேண்டும்.
அதேபோல் ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருவாரூரில் கனமழையால் சேதமடைந்த குறுவை பயிர்கள்: வேளாண் துறை அலுவலர்கள் ஆய்வு