திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் புறநகர் பகுதியின் பிரதான சாலை, நியூ பைபாஸ் சாலை. இது திருமகோட்டை, மதுக்கூர், வடசேரி ஊர்களுக்குச் செல்லும் சாலைகளை இணைக்கிறது. பல ஊர்களில் இருந்து வரும் கனரக வாகனங்களும் மன்னார்குடி நகர் பகுதிக்குள் செல்லாமல் பிற இடங்களுக்கு எளிதாகச் செல்ல இந்த சாலையே பேருதவியாக உள்ளது.
இந்நிலையில், தற்போது பெய்த மழையால் ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் சாலையைக் கடக்கும்போது மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், இச்சாலை வழியாக சரக்கு ஏற்றிச் செல்லும் லாரி, கனரக வாகனம், ஆட்டோ, வேன்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மழைக்காலம் என்பதால், இச்சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
சாலையில் உள்ள பள்ளங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுவதால் நடந்து செல்வோரும் வாகனங்களில் செல்வோரும் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். இது குறித்து மன்னார்குடி நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இச்சாலையை சீரமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : குண்டும் குழியும் நிறைந்த சாலை: மீம்ஸ்களால் வறுத்தெடுக்கும் திருப்பத்தூர்வாசிகள்!