திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தில்லைவிளாகம் இடையர்காடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (30 )இவருக்கு யுவராணி என்ற மனைவியும் ஆயுஸ் என்ற மகனும் உள்ளனர். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அசோக் வீட்டில் தேவையற்ற உணவுக்கழிவு மற்றும் மனிதக் கழிவுகளை பயன்படுத்தி சமையல் எரிவாயு உற்பத்தி செய்து வருகிறார்.
உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவை தனது வீட்டின் சமையலுக்கு சில ஆண்டுகளாகவே பயன்படுத்தி வருகிறார். மேலும், அருகில் உள்ள தனது நண்பர்கள் வீட்டிற்கும் இந்த அமைப்பை செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில், தஞ்சாவூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் உமாமகேஸ்வரி தலைமையில் அலுவலர்கள் அவருடைய பணியினை நேரில் பார்வையிட்டு பாராட்டியுள்ளனர்.
முதற்கட்டமாக திருத்துறைப்பூண்டி நகர்பகுதியில் உள்ள அம்மா உணவங்களில் உணவுக் கழிவுகளை கொண்டு எரிவாயு உற்பத்தி செய்வதற்கான வழிவகைகளை அசோக் மூலமாக செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும், பொதுமக்கள், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனத்தினர் இந்த முயற்ச்சியை மேற்கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: பயன்படாத பொருட்களினால் கைவினைப்பொருட்கள் செய்து அசத்திய மாணவர்கள்!