திருவாரூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடிய, உழவரின் போராட்டக்களத்திற்குள், ஒன்றிய உள் துறை இணை அமைச்சரின் மகன் தனது காரை செலுத்தி இரண்டு உழவரைப் படுகொலை செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டுகிறார் பி.ஆர். பாண்டியன்.
உத்தரப் பிரதேச வன்முறையைக் கண்டித்தும், உயிரிழந்த உழவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், பி.ஆர். பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட உழவர் நேற்று (அக்டோபர் 4) மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
பிரதமரின் அமைதிக்குக் காரணம் என்ன?
இதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய பி.ஆர். பாண்டியன், “ஒன்றிய அரசு இயற்றிய வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக, உழவர் தொடர்ந்து போராடிவருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்க காவல் துறை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி 400-க்கும் மேற்பட்ட உழவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய நாள் (அக்டோபர் 3) உத்தரப் பிரதேசத்தில் போராடிய விவசாயிகள் மீது, ஒன்றிய உள் துறை இணை அமைச்சரின் மகன், தனது காரை ஏற்றி இரண்டு உழவரைப் படுகொலை செய்துள்ளார். படுகொலை நடந்து இருபத்து நான்கு மணி நேரம் கடந்தும், இதுவரை ஒன்றிய அரசு வாய் திறக்க மறுப்பது, உழவரின் படுகொலைக்கு ஊக்குவிப்பதாக அமைகிறது.
ஒரு நாட்டைக் காக்க வேண்டிய பிரதமர், உழவர் படுகொலை செய்யப்படும் நிலையை வேடிக்கைப் பார்ப்பது வேதனை அளிக்கிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் உள் துறை இணை அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்.
உழவரின் இறப்பிற்குப் பிரதமரும், உள் துறை இணை அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும். இதனை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இனியும் பிரதமர் காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.