மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு சட்டவிரோத நடவடிக்கைகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
பிரதமர், ஜல்சக்தி துறை அமைச்சர் தொடர்ந்து கர்நாடகாவில் அரசியல் லாபம் கருதி மறைமுக ஆதரவளித்து கர்நாடக அரசின் செயலை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்படவிடாமல் முடக்கி வருகின்றனர். நிரந்தர தலைவரை நியமனம் செய்யவில்லை. இந்ந நிலையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா உள்கட்சி பூசலால் பதவியை ராஜினாமா செய்யும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதிலிருந்து தனது பதவியை பாதுகாத்துக் கொள்வதற்கும், உள்கட்சி பிரச்னையை திசை திருப்புவதற்கும் மேகதாது அணை கட்டுமான பணியை தீவிரப்படுத்தும் நோக்கோடும் செயல்பட்டு வருகிறார்.
ஏற்கனவே காவிரி போராட்டம் தீவிரமடைந்த நிலையில் கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த 1,000க்கும் மேற்பட்ட குண்டர்களை விடுவித்து பேருந்துகளுக்கு தீ வைப்பு, தமிழர்கள் சொத்துக்களை சூறையாடியது உள்ளிட்ட மிகப்பெரும் கலவரத்தை நடத்தியது.
அதனை பின்பற்றி தற்போதைய எடியூரப்பா அரசும் தீவிர கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எங்களது கோரிக்கையை ஏற்று குடியரசு தலைவரை சந்தித்து உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமனம் செய்திடவும், தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்படவும் அனுமதிக்க வேண்டும்.
மேகதாது அணை கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்த ஒன்றிய அரசுக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துவதை வரவேற்கிறோம்.
இச்சந்திப்பை ஏற்று, வரும் ஜூலை 26ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம்.
கர்நாடகாவில் கலவரம் நடத்துவதற்கான சதித்திட்டம் குறித்தும் குடியரசுத் தலைவரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் முறையிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
டெல்லியில் நடைபெற உள்ள விவசாயிகள் போராட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய அனுமதி வழங்கி கோரிக்கையின் நோக்கத்தை உணர்ந்து நாடாளுமன்றத்தில் சட்டத்தை கைவிட அறிவிப்பு செய்திட வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு முழு ஆதரவு அளித்து பங்கேற்ப்போம்" என்றார்.
இதையும் படிங்க: விரைவுச் சாலைத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதல்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு