திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்து சமய அறநிலையத்துறையால் மருத்துவமனையிலுள்ள நோயாளிகள், நோயாளிகளுடன் உள்ளவர்களுக்கு சாப்பாடு வழங்கும் திட்டத்தினை திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், 'தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க மருத்துவமனைகளிலுள்ள நோயாளிகள், நோயாளிகளுடன் உள்ளவர்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதனால் உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதினைக் கருத்தில் கொண்டு, இந்த உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து செயலாற்றிவரும் முதலமைச்சர் ஸ்டாலினை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில், இந்துசமய அறநிலையத் துறையினரால், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காலம் வரை உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து தொய்வில்லாமல் வழங்கப்படும்' எனத் தெரிவித்தார்.