திருவாரூர்: புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்ட எல்லைக்குள் மணலி கிராமம் அமைந்துள்ளது. தமிழ்நாடு எல்லைப் பகுதியான நன்னிலம் அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.
தமிழ்நாட்டின் ஆட்சியதிகாரத்துக்குள் வரும் மணலி கிராமம், நான்கு புறமும் காரைக்கால் மாவட்ட எல்லைகளால் சூழப்பட்டுள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகப் பயணிக்க பல ஆண்டுகளாகப் பாலமின்றி அவதிக்குள்ளாகிவருகின்றன.
மரப்பாலத்தில் ஆற்றைக் கடக்கும் மக்கள்
கிராமத்திலிருந்து ஆற்றைக் கடந்துசெல்ல ஒரே ஒரு மரப்பாலம் மட்டுமே உள்ளது. தற்போது மரப்பாலமும் மிக மோசமான நிலையில் உள்ளதால், ஆற்றைக் கடக்க மிகுந்த அச்சம் ஏற்படுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அவரச காலங்களில் உயிர்காக்கும் வாகன ஊர்திகள்கூட கிராமத்திற்குள் வர முடியவில்லை.
நியாயவிலைக் கடைகளில் பொருள்களை வாங்கச் செல்ல சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு அமைத்துக் கொடுத்த பாலமே பல ஆண்டுகளாகப் பேருதவியாக இருந்துவருகிறது.
மாநில எல்லை அருகே அமைந்துள்ள தங்கள் கிராமத்திற்கு பாலம் அமைத்துத் தர பலமுறை கோரிக்கைவிடுத்தும், அரசு அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தங்கள் கிராமத்திற்குத் தரமான கான்கிரீட் பாலம் அமைத்துத் தர முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணலி கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'செம... மழை' : திருவாரூரில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!