ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம் புள்ளவராயன் குடிக்காடு திருமூர்த்தி என்பவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து வீர மரணமடைந்தார். அவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது, "இவரது குடும்பம் வறுமையில் வாழ்ந்தாலும் திருமூர்த்தியின் அர்ப்பணிப்பு மிகுந்த போர் குணத்துடன் தாய் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டது அவரது குடும்பத்திற்கு மிகுந்த நம்பிக்கையையும் பெருமிதத்தையும் அளித்துள்ளது.
இவருக்கு ராணுவம் மூலம் கிடைத்த மாத ஊதியத்தைக் கொண்டு மட்டுமே சராசரி குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். தற்போது இவரது மறைவால் குடும்பம் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது. இவரது வாரிசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு வேலை வழங்க முதலமைச்சர் உத்திரவிட்டுள்ளது ஆறுதல் அளிக்கிறது.
அதே நேரம் தற்போதைய சூழலில் அவரது குடும்பத்தின் வறுமையை போக்க தமிழ்நாடு அரசு நிதி வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் அவரது குடும்பத்தாரும், விவசாயிகளும் நம்பிக்கையுடன் உள்ளனர். இதை உணர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்கி பாதுகாக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.