திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கருவேப்பன்சேரி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், காரைக்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் ரயில்பாதை அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் பொதுமக்கள் அருகில் உள்ள கிராமங்களுக்குச் செல்ல இந்த ரயில்வே தளத்தின் கீழ்பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், தொடர் மழை காரணமாகவும், நீரூற்று காரணமாகவும் மழை நீரானது கீழ் பாலம் முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் இந்த பாதையினை பயன்படுத்த முடியாமல் ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.
மேலும் சுடுகாடு, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் இந்த பாலம் உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் தேங்கியிருந்த மழை நீரில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த கீழ் பாலம் இவ்வாறு பிரச்னைகளை ஏற்படுத்துவதால் தங்களுக்கு ரயில்வே மேம்பாலம் அமைத்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: காவிரி உபரி நீரை பஞ்சப்பட்டி ஏரியில் நிரப்ப விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!