தமிழ்நாடு முழுவதும் நாளை ஆடிப்பெருக்கு கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு ஊரடங்கு முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், திருவாரூர் கடைவீதிகளில் பொருள்களை வாங்க மக்கள் அதிகளவில் கூடியுள்ளனர்.
இதனால் இன்று (ஆகஸ்ட் 1) காலை முதல் திருவாரூர் கடைவீதிகளில் மக்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தின் நுழைவுவாயிலில் தடுப்புகள் அமைத்து, பொதுமக்கள் உள்ளே வர காவல் துறையினர் அனுமதித்தனர்.
அதனையும் மீறி பொதுமக்கள் பலர் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருள்களை வாங்கிச் சென்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவலை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இச்சூழலில் பொதுமக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் அலட்சியப் போக்குடன் பொருள்களை வாங்கிச் செல்வது கரோனா பரவலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.