திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின்கீழ் இயங்கும் பிரித்வி பாரம்பரிய இயற்கை உழவர்கள் அறக்கட்டளை அமைப்பு மூலம் மத்திய அரசின் பி.ஜி.எஸ். இயற்கை தரச்சான்றிதழ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கக்கூடிய இயற்கைத் தரச் சான்றிதழ் பெறுவது தொடர்பான வழிமுறைகள் குறித்து உழவர்களுக்கான சந்திப்புக் கூட்டம், தமிழ்நாடு இயற்கை உழவர் இயக்க மாநிலச் செயலாளர் அசோகன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பி.ஜி.எஸ். தரச்சான்றிதழ் பெற வேண்டிய வழிமுறைகள் குறித்து பி.ஐ.என்.எஃப்.டி. (பி.ஜி.எஸ். இந்தியா) தமிழ்நாடு மண்டலக் குழுப் பொறுப்பாளர் ஸ்ரீராம் அவர் பேசுகையில்,
"மறைந்த இயற்கை வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார், நெல் ஜெயராமன் மூலமாகத் தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் பாரம்பரிய இயற்கை வேளாண்மை மேற்கொள்ளப்பட்டு, நாடு முழுவதும் பல இயற்கை வேளாண்மை செய்துவரும் உழவர்களை அங்கீகரித்து ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய உயர்மட்டக் குழுவால் உருவாக்கப்பட்ட பி.ஜி.எஸ். இந்தியா வழிகாட்டுதலின்படி தகுதிவாய்ந்த இயற்கை உழவர்களைக் கண்டறிந்து, தொடர் கள ஆய்வுகள் மேற்கொண்டு மத்திய அரசின் இயற்கைத் தரச் சான்றிதழ் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்தச் சான்றிதழ் பெறுவதன்மூலம் இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் உழவர்கள் தாங்கள் விளைவித்த விளைபொருள்களை நேரடியாக விற்பனை செய்ய வழிவகுக்கும்.
மத்திய அரசால் இயற்கை உழவர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை நேரடியாக உழவர்களின் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதால், இயற்கை உழவர்கள் அனைவரும் இந்தச் சான்றிதழைப் பெற்று நஞ்சில்லாத உணவு உற்பத்தி செய்யும் மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்ற முன்வர வேண்டும்" எனக் கூறினார்.