திருவாரூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 336 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது அறுவடை பணிகள் மாவட்டம் முழுக்க பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
கடந்த மூன்று நாள்களாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் முழுவதும் மழைநீரில் சாய்ந்துள்ளது.
குறிப்பாக பெரும்பண்ணைநல்லூர், காப்பனாமங்கலம், குடவாசல், திருவிடைச்சேரி, எருமதலை, உள்ளிட்ட கிராமங்களில் மூன்று நாள்களாக பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 300 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் முற்றிலும் சாய்ந்தன.
இதனால் இந்தப் பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். தற்போது மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் மழை நீடித்தால் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
ஏக்கருக்கு 25 முதல் 35 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதால், கனமழையால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: காட்டுப்பன்றிகள் அட்டகாசம் கலங்கும் நிலக்கடலை விவசாயிகள்!