திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் துவங்கப்பட்டு, 2006ம் ஆண்டு முதல் பாரம்பரிய நெல்லை மீட்டெடுக்கும் வகையில் மறைந்த நெல் ஜெயராமனால் தேசிய நெல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பால் நெல் ஜெயராமன் மரணமடைந்தார்.
![Farmers are marching in the cattle](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-01-08-paddy-festival-7204942_08062019111932_0806f_1559972972_531.jpg)
இந்நிலையில், கிரியேட் அமைப்பு சார்பில் 13-வது தேசிய நெல் திருவிழா இன்று தொடங்கியது. இதில் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்திலிருந்து நெல் திருவிழா நடைபெறும் அரங்கம் வரை பாரம்பரிய நெல்லை மாட்டுவண்டியில் வைத்து ஊர்வலமாக உழவர்கள் பேரணியாக வந்தனர். இந்த திருவிழா இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.நெல் திருவிழாவில் ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வேளாண் வல்லுநர்கள், விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.
![Nel Jayaraman](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-01-08-paddy-festival-7204942_08062019111932_0806f_1559972972_1034.jpg)
இதனையடுத்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மறைந்த நெல் ஜெயராமன் திருவுருவப் படம் மற்றும் நெல் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மறைந்த நெல் ஜெயராமனின் முயற்சிகளுக்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். பாரம்பரிய நெல்களை தமிழக அரசு கொள்முதல் செய்து வருகிறது. அனைவரும் ஒன்று சேர்த்து கொண்டாடும் ஊர் திருவிழாவாகும்" எனத் தெரிவித்தார்.
![Food Minister Kamaraj Interview](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-01-08-paddy-festival-7204942_08062019111932_0806f_1559972972_19.jpg)