திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் அமைந்துள்ள காளியாகுடி பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமாகின. புரெவி புயல் காரணமாக திருவாரூரில் கடந்த 5 நாள்களுக்கும் மேலாக மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் நீர்நிலைகளும், குளங்களும் நிரம்பத் தொடங்கியுள்ளன.
இதனால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக உழவர்கள் சாகுபடி செய்துவரும் சம்பா தாளடி நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி அழுகத் தொடங்கியுள்ளன. காளியாகுடி, உக்கடை உள்ளிட்ட ஊராட்சி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சம்பா தாளடி பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி அழுகத் தொடங்கியுள்ளதால் உழவர்கள் செய்வதறியாது தவித்துவருகின்றனர்.
கடந்த மூன்று நாள்களாக நீரில் மூழ்கி கிடக்கும் பகுதிகளை மாவட்ட நிர்வாகம் இதுவரை வந்து பார்வையிடவில்லை என உழவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்தப் பகுதியில் நீர் வடியாததற்கு காரணம், அப்பகுதியில் உள்ள இடியாற்று வடிகால் வாய்க்கால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாததுதான் எனவும் உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அந்த வடிகால் வாய்க்காலில் ஆகாயத்தாமரை மண்டியுள்ளதால் தண்ணீர் வடியாமல் வயல்களில் தேங்கி உள்ளது எனத் தெரிவிக்கும் உழவர்கள், வருங்காலத்திலாவது வடிகாலைத் தூர்வாரக் கோரிக்கைவிடுக்கின்றனர்.
ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை செலவுசெய்து பயிரிட்டுள்ள நிலையில், சேதமான நெற்பயிர்களுக்குத் தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என உழவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.