இயற்கை வேளாண் அறிவியல் அறிஞர் நம்மாழ்வார் நினைவு தின நிகழ்ச்சி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் பங்கேற்று நம்மாழ்வார் திருவுருப்படத்திற்கு மலர்த்தூவி புகழஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தவும் நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்வதின் அவசியத்தை வலியுறுத்தியும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து செயல்பட்ட நம்மாழ்வாரின் கொள்கைகள் தற்போது மக்கள் இயக்கமாக மாறிவருகிறது.
பாரம்பரிய விவசாய முறைகளை பெரும்பாலான விவசாயிகள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். அவரது சேவையை அங்கீகரிக்கும்விதமாக தஞ்சாவூரில் நம்மாழ்வருக்கு மணிமண்டபம் அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் இணைந்து வானகத்தில் நிறுவப்பட்டுள்ள ஆராய்சி மையத்தை தேசிய அளவிலான ஆராய்சி மையமாக மாற்ற வேண்டும்.
நம்மாழ்வாரின் கனவை நனவாக்கும் வகையில் இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை கொள்முதல் செய்வதற்கு மாநில அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு மாநில அரசை நிர்பந்தம் செய்துவருகிறது.
தற்போது தட்கல் திட்டத்தில் வழங்கப்படும் மின் இணைப்புகளுக்கு மின் மீட்டர் பொருத்தப்பட்டுவருகிறது. எனவே, எந்த நேரத்திலும் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு தனது கொள்கை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும்.
இலவச மின்சாரம் ரத்துசெய்யப்பட்டால் விவசாய உற்பத்தி அடியோடு அழியும். இலவச மின்சாரம் ரத்துசெய்யப்பட்டால் பாதிக்கப்படும் விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்" என்றார்.
இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரிக்கை!