மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் பரிந்துரையின்படி, உரக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது. மானிய விலையில் உரம் மற்றும் இடுபொருள்கள் பெற ஆன்லைன் முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக உரக்கடை விற்பனையாளர்கள் வங்கிகளுக்குச் சென்று QR கோடுகளைப் பெற்று தங்களது கடைகளில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதற்கான சுற்றறிக்கையை திருவாரூர் மாவட்டத்திலுள்ள உரக் கடைகளில் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் அனுப்பியுள்ளார். இந்நிலையில், இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, "முன்பெல்லாம் உரக் கடைக்குச் சென்றால் பணத்தைக் கொடுத்து உரத்தைப் பெற்று வருவோம் ஆனால் இப்போது உரத்தைப் பெற்று பணத்தை ஆன்லைன், கூகுள் பே உள்ளிட்ட ஆப்களிலும், டெபிட் கார்டு மூலமாகவும் பணம் செலுத்தச் சொன்னால் எப்படி முடியும். எங்களுக்கு ஆன்லைன் என்றால் என்னவென்றே தெரியாது. சாதாரண செல்போன்களை பயன்படுத்துவதே கடினம்.
இதில் ஆன்ட்ராய்டு போனை எப்படி கையாள்வது? எப்படி பணம் பரிவர்த்தனை செய்வது?. இதனால் இந்த முறையை அனுமதிக்க வேண்டாம். பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்கின்றனர்.
இதையும் படிங்க: 1948ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறை காஷ்மீரில் மாவீரர் தினம் இல்லை