திருவாரூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்கள் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதில் தற்போது இரண்டு மடங்காக அதிகரித்து மாதத்திற்கு 150 முதல் 180 பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் ஓராண்டுக்கு நடைபெறும் பிரசவங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் பங்கு 6 சதவீதத்திலிருந்து தற்போது 17 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மேலும் பிரசவங்களை சுகபிரசவமாக மேற்கொள்ள பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கான தாய் சேய் நலத்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர், "மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவோடு பேசி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாத பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளிடம் அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் பிறக்கப்போகும் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல ஆலோசனைகளை மருத்துவர்கள் தொடர்ந்து வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவத்தின் சதவிகிதம் உயர்வதற்கு காரணமாக இருந்த சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள் என அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.