திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த ஆதிரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு சித்ரா என்கிற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழியில் இயற்கை விவசாயத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை விதைகளை நட்டு இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி வந்தார். மேலும் 2009ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நெல் திருவிழா நடத்தி அதன் வாயிலாக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகளிடம் பாரம்பரிய நெல் விதைகளைக் கொண்டு சேர்க்க வழி வகுத்தார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்தாண்டு காலமானார்.
இந்நிலையில், அவரை கவுரவிக்கும் விதமாக நெல் ஜெயராமன் பற்றிய சிறு குறிப்பை 12ஆம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் தமிழ்நாடு அரசு சேர்த்துள்ளது. அதற்காக அவர்களது குடும்பத்தினர் தமிழ்நாடு அரசுக்கும், கல்வித் துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.
இந்த பாடப் புத்தகங்கள் வாயிலாக பாரம்பரிய நெல் வகைகள் குறித்து இளம் தலைமுறையினர் அறிந்துக் கொள்ள முடியும் என்று, நெல் ஜெயராமனின் மனைவி சித்ரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.