திருவாரூர்: தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.
மேலும் தென் மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (அக். 8) மாலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு தொடங்கிய மழை, விடிய விடிய பெய்தது.
குறிப்பாக, ஆண்டிபந்தல், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், கொல்லுமாங்குடி, பேரளம், வேலங்குடி, திருக்கொட்டாரம் ஆகிய பகுதிகளில் இன்னும் தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சம்பா சாகுபடிக்கு தயாராகி வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.