திருவாரூர்: நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று (ஏப். 1) நன்னிலம் அருகே பேரளம், கொல்லுமாங்குடி, வலங்கைமான், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தபோது நீங்கள் செய்த பிரார்த்தனையால்தான் மீண்டும் உயிர்ப்பெற்று வந்துள்ளேன். 2011ஆம் ஆண்டு நன்னிலத்தில் போட்டியிட்டபோது 11ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். 2016ஆம் ஆண்டு தேர்தலில் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். இந்த முறையும் அதேபோல் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வாக்களியுங்கள்.
நன்னிலம் பகுதி மக்களுக்காக உயிர் உள்ளவரை உழைத்துக்கொண்டே இருப்பேன். வாரத்தின் ஏழு நாட்களில் 5 நாள்கள் மட்டுமே அமைச்சர் பணியையும், மீதமுள்ள இரண்டு நாள்கள் நன்னிலம் பகுதி மக்களுக்காகவும் உழைத்துள்ளேன். அமைச்சர் என்ற போதை ஒருநாளும் எனக்கு இருந்ததில்லை. உங்கள் வீட்டு பிள்ளையாகவே எப்போதும் நான் இருப்பேன். உங்களின் தேவைகளை உடனே நிறைவேற்றிக் கொடுத்துள்ளேன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: புல்லட்டில் பறந்து பரப்புரை செய்த நன்னிலம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்