திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் கிராமத்தில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாமை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று (ஆகஸ்ட் 7) தொடங்கிவைத்தார். இதனையடுத்து பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "இந்திய அளவில் தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 62 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மேலும் இ-பாஸ் வழங்குவதில் உள்ள நடைமுறைப் பிரச்னைகளை எளிமையாக்குவதற்கு, ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுவுடன் கூடுதலாக மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இ-பாஸ் பெரும் நடைமுறை எளிமையாக்கப்படும்.
அதேசமயம் மாநிலத்தில் பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்க முடியாத இடங்களில், நடமாடும் ரேஷன் கடைகள் திறக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மும்மொழி கொள்கை நாடு முழுவதும் இருந்த போதும் அறிஞர் அண்ணா, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் வழிகளைப் பின்பற்றி தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்படும். இதுவே அதிமுக அரசின் நிலைப்பாடு" என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.