திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கச்சனம், பழையங்குடி ஆகிய பகுதிகளில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சாந்தா , கூடுதல் ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், "புரெவி புயல் காரணமாக பெய்த மழையினால் திருவாரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 627 ஹெக்டேர் ( 1,36,567 ஏக்கர் ) பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின. மாவட்டத்தில் குடிமராமத்து பணி மூலம் அனைத்து ஆறுகளும் தூர்வாரப்பட்டுள்ள காரணத்தால், வீடுகளுக்குள் இதுவரை தண்ணீர் புகாத நிலை உள்ளது.
மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்க வைப்பதற்காக 211 முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 42 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டனர். மழை காரணமாக தற்போதுவரை ஆயிரத்து 606 வீடுகள் பாதிக்கப்பட்டு அவற்றை கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அனைத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்" என்றார்.