திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்.
இதற்கு முன்னதாக 35 மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் மற்றும் பெண்களுக்கு தையல் இயந்திரத்தை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் கூறும்போது, “தமிழ்நாடு முழுவதும் இதுவரை 23 லட்சத்து 724 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 102 நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. டெல்டா உள்ளிட்ட விளைச்சல் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் 485 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
விவசாயிகளுக்கு விவசாயக் கடன்கள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டதின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் குறுவை சாகுபடிக்கு விவசாய கடன்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 38 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.500 கோடி வட்டியில்லா விவசாயக் கடன் வழங்க நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை தவிர்த்து விட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மக்களுக்கு நல்லது” என்றார்.
இதையும் படிங்க: இலவச மின்சாரம் வழங்கக்கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!