திருவாரூர்: தமிழ்நாடு அரசு தற்போது விவசாயிகளின் நலனை காக்கின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நீடாமங்கலம், ஆதனூரில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய நாற்றங்கால், ஏழு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பசுந்தாள் உரச்சாகுப்படியினை தமிழ்நாடு வேளாண்மை துறை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஜூன் 7) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ தமிழ்நாடு அரசு தற்போது விவசாயிகளின் நலனை காக்கின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்தில் தற்போது வரை 21,608 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, 75,306 ஏக்கரில் நெல் நடவு மேற்கொள்வதற்கு வசதியாக 2,727 ஏக்கரில் நெல் நாற்றங்கால் அமைக்கப்பட்டு, தொடர்ந்து பல்வேறு இடங்களில் நெல் நாற்றங்கால் விடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும், 218 நெல் நடவு இயந்திரங்கள் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் நெல் நடவு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைமடை பகுதிகளுக்கும் பாசன நீர் விரைவில் சென்றடையும் வகையில் வாய்க்கால்கள், ஆறுகள் தூர்வாரும் பணிகளும் நடைபெற்றுவருகிறது” எனக் கூறினார்.
இந்நிகழ்வில் வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, வேளாண்துறை இயக்குநர் தட்சிணமூர்த்தி, திருவாரூர் சட்ட்ப்பேரவை உறுப்பினர் பூண்டி. கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: புனே ரசாயன ஆலையில் தீ விபத்து: 17 பேர் உயிரிழப்பு