திருவாரூர் மாவட்டம் சுரக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இந்த முகாமில் தேர்வாகக் கூடிய இளைஞர்களுக்கு தமிழ்நாட்டின் 5 அமைச்சர்கள் வருகை தந்து பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளனர்.
நியாய விலை கடைகளில் வழங்கப்படும் கரும்புகளை எப்போதும் இடைத்தரகர் இல்லாமல் கூட்டுறவுத்துறை தான் கொள்முதல் செய்து வருகிறது. எந்தெந்த பகுதிகளில் என்ன பொருள்கள் விளைகிறதோ அதை அந்த பகுதியின் மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து கூட்டுறவு துறை மூலம் தான் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இடைத்தரகர்களுக்கு வேலை இல்லை.
மத்திய அரசிடம் நெல் ஈரப்பதத்தை 17 விழுக்காட்டிலிருந்து இருந்து 20 விழுக்காடாக உயர்த்தி வழங்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதனால் தற்போது 20 விழுக்காடு உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'மூன்று, நான்கு என எத்தனை அணி வந்தாலும் எங்களுக்கு பயமில்லை'- கே. பாலகிருஷ்ணன்