திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கல் அருகேயுள்ள கீழகாவாத்துகுடியில் நடமாடும் ரேஷன் கடை வாகனத்தை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திருவாரூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருள்களை பெற்று செல்வதில் சிரமங்கள் உள்ள கிராமங்கள் கண்டறியப்பட்டு, அந்த மக்களின் சிரமங்களை நிவர்த்தி செய்கின்ற வகையில் 125 நடமாடும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்பட உள்ளன.
ரேஷன் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் நியாயவிலைப் பொருள்கள் வழங்கப்படும். காரணம் கூறி அவர்களுக்கான பொருள்கள் வழங்குவது தட்டிக்கழிக்கப்படாது. இடைத்தரகர்களிடம் விவசாயிகள் ஏமாறக்கூடாது என்பதற்காகவே வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு பிரச்னை என்றால் முதலாவதாக குரல் கொடுப்பது அம்மாவின் அரசாகத்தான் இருக்கும்.
பயோமெட்ரிக் முறையில் யாரும் தங்களுடைய பொருள்களை பெறுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாத வண்ணம் திட்டம் செயல்படுத்தப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை - அமைச்சர் துரைக்கண்ணு