திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு 8 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களின் எழுச்சி மிகப்பெரியது. இளைஞர்களின் எழுச்சி எந்த இயக்கத்தில் கிடைக்கிறதோ அந்த இயக்கம் தான் வெற்றி பெறும்.
சட்டம் ஒழுங்கு செயல்படவில்லை என்று ஸ்டாலின் கூறுவது தவறான கருத்து. அவர் தினமும் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார். சட்ட ஒழுங்கு அதிமுக ஆட்சியில்தான் மிக சிறப்பாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
பிரதமர் கிசான் திட்டத்தில் தாங்கள் தகுதியுடையவர்கள் என பயனாளிகளே நேரடியாகவே அவர்களின் பெயர்களை பதிவு செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதில் மாநில அரசு ஆய்வு செய்யும் நிலை அந்தத் திட்டத்தில் இல்லை. இருப்பினும் மத்திய அரசு யாரெல்லாம் விவசாயிகள் இல்லாதவர்கள் என்ற பட்டியலை அனுப்பி உள்ளதோ அவர்களை கண்டறிந்து பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை மாநில அரசு எடுத்து வருகிறது'' என்றார்.
இதையும் படிங்க:இருமொழி கொள்கை'யைப் பின்பற்ற தமிழ்நாடு அரசு முடிவு: மத்திய அரசுக்கு அமைச்சர் அன்பழகன் கடிதம்!