திருவாரூர் : டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து, பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும், அமைச்சர்கள் அடங்கிய குழு (நவ.11) கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்திட ஏதுவாக அறிக்கை தர முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார் .
தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் கன மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து வருகின்றனர்.
நிவாரணம் வழங்கப்படும்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஐ.பெரியசாமி, "கன மழையால் காவிரி டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 17,000 எக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு குறித்துக் கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் பாதிப்புக்கள் குறித்து முதலமைச்சரிடம் தெரிவிப்போம். பின்னர் அதற்கான நிவாரணம் வழங்கப்படும்.
மத்திய அரசிடம் கோரிக்கை
மேலும், பயிர்க் காப்பீட்டு பிரிமீயம் செலுத்த கால நீடிப்பு குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இருந்த போதிலும் விவசாயிகள் வரும் 15 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீட்டு செய்து கொள்ள வேண்டும். பிரிமீயம் கட்ட இலகுவாக வரும் ஞாயிற்றுக்கீழைக் கூட்டுறவு வங்கிகள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. மழை நேரத்தில் கால்நடைகள் இறப்பு போன்ற இழப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நிவாரணம் வழங்கப்படும்" என கூறினார்.
இதையும் படிங்க : வெள்ள நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - அரசிடம் நிவாரணத்தை எதிர்பார்க்கும் விவசாயிகள்