திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஊரின் ஒதுக்குப்புறமாக அரசு மதுபானக்கடை அமைக்க கட்டடம் கட்டும் பணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கடை திறக்கப்படாது என மாவட்ட அலுவலர்கள் உறுதி அளித்தனர். திடீரென இன்று (ஜூலை 18) அந்த மதுபான கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படுவதாக தகவல் வெளியானது.
இதையறிந்த கிராம மக்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மதுமானக் கடைக்கு நிலம் கொடுத்த நில உரிமையாளருடன் அப்பகுதி மக்களும் வாக்குவாதம் செய்தனர்.
தொடர்ந்து மதுபானக் கடை அமைந்துள்ள இடத்தில் அரசுப் பள்ளி, மாணவியர் விடுதி உள்ளது எனவும் ஆகவே அவ்வழியாக செல்லும் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இப்போராட்டம் ஒருபுறம் நடக்க அதே மதுக்கடையை திறக்கக் கூறி மதுப்பழக்கம் கொண்ட சிலர் பதில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், “மது வாங்குவதற்கு வெகுதூரம் செல்ல வேண்டி இருப்பதாகவும், மற்ற போதை பொருள்களில் இருந்து தங்களை காப்பாற்ற மதுக்கடையை திறக்க வேண்டும்” என்றும் கோஷங்களை எழுப்பினர்.
இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதையடுத்து, திருத்துறைப்பூண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மன்னார்குடி தாசில்தார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதனடிப்படையில் இருதரப்பினரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: முழு ஊரடங்கு தினத்தில் மதுபானம் பதுக்கிய இளைஞர் கைது!