திருவாரூர்: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் இன்று (ஜூலை 7) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் பருவம் மாறி பெய்த பெரும் மழையால், காவிரி டெல்டா மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் முற்றிலும் அழிந்தது.
இழப்பீடு குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை
இதற்கான இடுபொருள் இழப்பீடாக தமிழ்நாடு அரசு 100 விழுக்காடு வழங்கியுள்ளது. முழு இழப்பீடு காப்பீட்டு நிறுவனம் மூலம் விரைவில் பெற்றுத்தரப்படும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உத்தரவாதம் அளித்தது. காப்பீடு செய்து பாதிக்கப்பட்டால், அறுவடை ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டு மூன்று மாதத்திற்குள் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால், ஆறு மாதங்கள் கடந்த நிலையில் இதுவரையிலும் இழப்பீடு குறித்த எந்த அறிவிப்பையும் காப்பீடு நிறுவனம் வெளியிடவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக சம்பா சாகுபடி பணி தொடங்குவதற்கு முன்னதாக முழு இழப்பீட்டு தொகையை உடன் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 2020ஆம் ஆண்டு குறுவை காப்பீடு செய்த விவசாயிகளுக்கு திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் மாவட்ட வேளாண் துறை கவனக்குறையால் இதுவரை இழப்பீடு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
தனியார் காப்பீடு நிறுவனங்கள் ஊழல்
மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தனியார் பெரு நிறுவனங்கள், கொள்ளை லாபம் அடிக்கும் வகையில் தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட காப்பீடு திட்டத்தை ரத்து செய்து தனியாருக்கு அனுமதி வழங்கியது. இதனால் விவசாயமற்ற நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்யும் தொகையை தனியார் காப்பீடு நிறுவனங்கள் ஊழல் முறைகேடு செய்து பயன் பெற்று வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு தமிழ்நாட்டில் ஏற்கனவே குஜராத், மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில் மாநில அரசுகள் வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்துகிறது.
தமிழ்நாட்டிலும் விவசாயிகள் நலனை முன்னிறுத்தி செயல்படும் தமிழ்நாடு அரசு உடனடியாக நமக்கென தனி காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
விவசாயிகளின் எதிர்பார்ப்பு
காவிரி டெல்டாவில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான மாநில, மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக்கள் கடந்த ஆட்சியில் அரசியல் பார்வையுடன் அமைக்கப்பட்டது. அதனை மாற்றி புலமை பெற்ற அறிஞர்களையும், முன்னணி விவசாயிகள் கொண்ட குழுவாக அரசியலுக்கு அப்பாற்பட்டு மாற்றி அமைத்திட வலியுறுத்துகிறேன்.
திமுக தேர்தல் அறிக்கையில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து, விவசாயிகள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். அதை உடனே நடைமுறைப்படுத்திட வேண்டுகிறேன்" என்றார்.