திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக வாக்குபதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.
வரும் ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்கள் பங்கேற்க அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
மன்னார்குடி அருகே திருநாட்டியத்தான்குடியை சேர்ந்த சபாரத்தினம்(25) என்ற இளைஞர், தனது உறவினர் திமுக சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் வாக்கு எண்ணிக்கைக்கான முகவர் அட்டை வாங்கச் சென்றுள்ளார்.
அவர் நீண்ட நேரம் வரிசையில் நின்று கொண்டிருந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த தங்கமணி என்பவர் வரிசையில் நிற்காமல் நேராக உள்ளே சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் ஞான சேகரிடம் அடையாள அட்டை வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த திமுக முகவர்கள் அலுவலகத்தினுள் சென்று அதிமுக முகவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசேகர் செய்வதறியாது நின்ற நிலையில், மேஜையைத் தட்டி, நாற்காலி, முக்கியமான ஆவணங்களை வீசிய போது மேஜை மேல் இருந்த கண்ணாடி உடைந்து அருகில் இருந்த திமுக முகவர் சபாரத்தினம் தொடையில் கிழித்ததாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த சபாரத்தினம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, அலுவலத்தில் தகராறு செய்த அரசியல் கட்சியினரைக் கண்டித்து தேர்தல் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் வசந்தன் பேசுகையில், தேர்தல் பணியைப் புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: