தூத்துக்குடி: துாத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் சிக்கன் பிரியாணி, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அண்மையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், இது குறித்து கூட்டாம்புளியைச் சேர்ந்த திமுக விவசாய அணி அமைப்பாளர் சுரேஷ் கேள்வி எழுப்பினார். அப்போது அவர், "20 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி விற்பது சாத்தியமில்லை. மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அதன் தரம் இருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்" என கோரிக்கை வைத்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். மேலும் 20 ரூபாய் பிரியாணியின் தரத்தை ஆய்வு செய்யவும் அவர் உத்தரவிட்டார்.
உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு
அதனடிப்படையில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் மாரியப்பன் தலைமையிலான உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், மாப்பிள்ளையூரணி அருகே உள்ள டேவிஸ்புரத்தில் உள்ள 20 ரூபாய் பிரியாணி கடையின் தயாரிப்புக் கூடத்தினை ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வில், பிரியாணிக்குப் பயன்படுத்திய கோழி இறைச்சியில் எந்தவிதமான துர்நாற்றங்களோ, வேற எவ்விதமான இயல்புக்கு புறம்பான அம்சங்களோ இல்லை என்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், அதிலிருந்து உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜகபர் அலி கொலை எதிராெலி.. திருமயம் காவல் ஆய்வாளர் முதல் தாசில்தார் வரை உருளும் அதிகாரிகளின் தலைகள்! |
மேலும், சமைக்கப்பட்ட பிரியாணியும் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டது. உணவு பகுப்பாய்வு அறிக்கை பெறப்பட்டவுடன் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

சமையலறையில் பிராணிகள்
அதே வேளையில், உணவு தயாரிப்புக் கூடம் மிகவும் அசுத்தமாகவும், சமைக்கும் பகுதியில் பூனை, நாய் போன்ற பிராணிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்ததாலும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சோதனை மேற்கொண்ட கடையில், சமைப்பதற்காக வாங்கிய மூலப்பொருட்கள் மற்றும் விற்பனை செய்த உணவுப் பொருள்களுக்கு உரிய ரசீதுகள் இல்லாததாலும், உணவு பகுப்பாய்வு அறிக்கைகள் இல்லாததாலும், சமையலறை அசுத்தமாக இருந்ததாலும் பொது சுகாதார நலனைக் கருத்திற்கொண்டு, சம்பந்தப்பட்ட உணவகத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
தற்காலிக சீல்
உணவு தயாரிப்புக் கூடத்தை சீர் செய்ய முன்னறிவிப்பு வழங்கிய உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், அவற்றை சரி செய்த பின்னர் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு உணவகத்தை திறக்க அனுமதி வழங்கப்படும் என்று கூறினர்.
இதையும் படிங்க: ஈரோடு இடைத்தேர்தல்: பண மாலையுடன் வந்த சுயேட்சை வேட்பாளர்; திமுக மீது பகீர் குற்றச்சாட்டு! |
உணவகத்தில் சோதனை முடித்த பின் நம்மிடம் பேசிய உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், “பிரியாணி பொட்டலத்தில் சிக்கன் துண்டுகள் சிதைந்த துகள்களாக இருப்பதால், “சிக்கன் பிரியாணி” என்ற வாசகம் நுகர்வோரைத் தவறாக வழி நடத்தும். இதுகுறித்தும், இந்த கடைக்கு சிக்கன் விற்பனை செய்த நிறுவனத்திடமும் விசாரணை மேற்கொண்டு, தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.