சென்னை: 'புஷ்பா 2' திரைப்படம் இந்த வாரம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி பிரமாண்டமாக வெளியானது 'புஷ்பா 2'. புஷ்பா முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்ததால் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. 'பாகுபலி' திரைப்படத்திற்கு பிறகு 'புஷ்பா' திரைப்படம் தெலுங்கு சினிமாவிற்கு முக்கியமான படமாக அமைந்தது.
தென்னிந்தியாவை விட புஷ்பா முதல் பாகத்திற்கு வட இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது. பான் இந்தியா திரைப்படமாக பல்வேறு மொழிகளில் வெளியான ’புஷ்பா 2’ திரைப்படம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளை விட ஹிந்தி மொழியில் அதிக வசூலை பெற்றது. புஷ்பா 2 வெளியாகி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், பிரபல சினிமா இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவலின்படி உலக அளவில் 1739.70 கோடியும், இந்திய அளவில் 1468.95 கோடியும் வசூல் செய்துள்ளது.
இதில் தெலுங்கு மொழியில் 340.72 கோடியும், ஹிந்தியில் 811.1 கோடியும், தமிழ் மொழியில் 58.56 கோடியும், மலையாள மொழியில் 14.15 கோடியும், கன்னட மொழியில் 7.77 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வசூல் ரீதியாக புஷ்பா 2 திரைப்படம் வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனங்களை பெற்றது. புஷ்பா 2 படம் ஓடும் நேரம் கிட்டதட்ட 4 மணி நேரம் என்பது படத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அது மட்டுமின்றி புஷ்பா 2 வெளியானது முதல் சர்ச்சைகளுக்கு குறைவில்லை.
#Pushpa2TheRule Extended Version Will be streaming from Jan 30 on NETFLIX.
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 27, 2025
3 Hrs 44 Mins. pic.twitter.com/uicXBM3LWL
இதையும் படிங்க: நாளை வெளியாகும் சிவகார்த்திக்கேயன் படத்தின் தலைப்பு...? - SK25 TITLE ANNOUNCEMENT
ஹைதராபாதில் புஷ்பா 2 சிறப்பு காட்சி திரையிடப்பட்ட சந்தியா திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் வந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்த நிலையில், அவரது மகன் படுகாயமடைந்து மருத்துவமமையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு, பின்பு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு பிரச்சனைகளை கடந்து வசூல் சாதனை படைத்த ’புஷ்பா 2’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வரும் ஜனவரி 30ஆம் தேதி ரிலீசாகும் என தகவல் வெளியாகியுள்ளது.