திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தேவங்குடி அக்ரகார தெரு மற்றும் மேட்டுத் தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.
அங்கு கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன்பு சுடுகாடு ஒன்று கட்டித் தரப்பட்டது. ஆனால், சுடுகாட்டிற்குச் செல்ல நடைபாதை இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை வேளாண் நிலத்தில் எடுத்துச் செல்லும் அவலநிலை இன்றுவரை நீடித்துவருகிறது.
சுமார் 50 ஆண்டு காலமாக இந்தக் கொடுமை நிகழ்ந்துவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அக்ரகார தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடலை வயல் வரப்புகளின் வழியே சுமந்துசென்றனர்.
சாலை வசதி செய்து தர வேண்டி பலமுறை அரசு அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தும் அலட்சியம் காட்டிவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிராம மக்களின் சிரமம் புரிந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சுடுகாட்டிற்குச் செல்ல தரமான சாலையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல்: கவுன்சிலிங் தேதி விரைவில் வெளியாகும்