திருவாரூர் அருகே கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (43), இவரது மனைவி அமராவதி (39). இவர்களுக்கு நித்திஸ்வரன் (13), நித்யஸ்ரீ (11) என இரு பிள்ளைகள் உள்ளனர்.
கேரளாவில் கூலித்தொழில் செய்துவரும் செந்தில்குமார் நேற்று தன் உறவினர் திருமணத்திற்காக ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே செந்தில் குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு இருந்துவந்த நிலையில் இன்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அமராவதியை வீட்டில் உள்ள எரிவாயு உருளையை (கேஸ் சிலிண்டர்) திறந்துவிட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அமராவதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில்குமார் தப்பி ஓடி அருகில் இருந்த தோப்பில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து அங்கு சென்ற கொரடாச்சேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.