திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மருதவனம் பகுதியைச் சேர்ந்த விவசாயி எம்ஜிஆர் (எ) ராமச்சந்திரன். இவரது மனைவி ராஜேஸ்வரி (65). இவர்களுக்குத் திருமணமான நிலையில் மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை அடையாளம் தெரியாத நபர் வீட்டிற்குள் நுழைந்து ராஜேஸ்வரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பணத்தை திருடிவிட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி காவல் துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். மேலும் திருவாரூரிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை இடப்பட்டது.
தெடர்ந்து பொதுமக்களிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததில், 'ராமச்சந்திரன் வீட்டிற்கு திருத்துறைப்பூண்டி வாளமாபுரம் பகுதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி முருகானந்தம் என்பவர் அடிக்கடி வந்துசெல்வார்' எனக் கூறியுள்ளனர்.
இதையடுத்து காவல் துறையினர் இரவோடு இரவாக முருகானந்தத்தை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் ராஜேஸ்வரியை பணத்திற்காக கழுத்தறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதனடிப்படையில் காவல் துறையினர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: வட்டாட்சியர் உயிருடன் எரித்துக் கொலை; தெலங்கானாவில் கொடூரம்!