திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த 2ஆம் தேதி ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்டதால் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
அதையடுத்து திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர் பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது, கொள்ளையில் ஈடுபட்ட மணிகண்டனை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது அவருடன் இருந்த சுரேஷ் என்ற நபர் காணாமல் போனதையடுத்து சுரேஷின் தாயாரை காவலர்கள் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது முருகன் என்பது தெரியவந்தது. அவரைப் பிடிக்க காவல் துறையினர் திணறிவரும் நிலையில், முருகனின் அண்ணன் மகன் முரளி, உறவினர்கள் குணா, ரவி, மாரியப்பன், பார்த்திபன் என 10க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் விசாரணை வலையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று திருவாரூர் பஜனை மாடத் தெருவைச் சேர்ந்த திருமாறனை காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகனை பிடித்தால் பல்வேறு கொள்ளை வழக்குகள் வெளிவரும் என்பதால் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்கலாமே: வீடு வாடகைக்கு பார்ப்பதுபோல் வந்து கைவரிசை