திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜீவல்லரியில் அக்டோபர் 2ஆம் தேதி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், திருவாரூரில் வாகன சோதனையின்போது திருவாரூர் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சிக்கினார். அவருடன் இருந்த சுரேஷ் என்பவர் தப்பிவிட்டார்.
அவரிடம் இருந்த பையை கைப்பற்றி பார்த்தபோது அதில் லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, தப்பியோடியவர் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் மணிகண்டனும், சுரேஷூம் சேர்ந்தே திருச்சி நகை கடையில் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து தப்பியோடிய சுரேஷ் என்பவரின் தாய் கனகவள்ளியை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன், கனகவள்ளி இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தக் கொள்ளை கும்பலின் தலைவனகாக கருதப்படும் முருகன் என்பவரின் அண்ணன் மகன் முரளியை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், முருகனின் உறவினர்களான கார்த்தி, மாரியப்பன், குணா, ரவி, பார்த்திபன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.