திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் மின்சாரம் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,.’குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்க இலவச தொலைப்பேசி எண் 108 004 256 722 செயல்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.
இம்முறை கர்நாடகாவிலும் தண்ணீர் இல்லாததால் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான தண்ணீர் தேவைகளை நிவர்த்தி செய்ய பம்பு செட்டுகள் மூலம் தண்ணீர் எடுக்க முயற்சி செய்து வருகின்றனர். எனினும், விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாது என்ற முடிவுக்கு வர வேண்டாம், மேலும் நீர் வளத்தை பொறுத்து குறுவை சாகுபடியா, சம்பா சாகுபடியா என விவசாயிகள் முடிவு செய்வார்கள், அரசும் முடிவு செய்து அறிவிக்கும்’ என்றார்.