திருவாரூர் வர்த்தக சங்கக் கட்டிடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜகவின் மாநிலச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நவம்பர் ஆறாம் தேதி பாஜக மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் திருத்தணியில் இருந்து வெற்றிவேல் யாத்திரை போவதாக திட்டமிட்டுள்ளோம். இந்த ஆன்மிகப் பயணம் டிசம்பர் மாதம் நிறைவு பெறும்.
தமிழ்நாட்டில் கயவர்கள் கூட்டத்தை தோலுரித்துக் காட்டக்கூடியதாகவும், திருப்புமுனையை ஏற்படுத்துவதாகவும் இந்த வெற்றிவேல் யாத்திரை அமையும்.
கந்தசஷ்டி கவசம் விவகாரத்தை பாஜக அரசு, அரசியல் பிரச்னையாகவும் சமூகப் பிரச்னையாகவும் கையாண்டு வருகிறது. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அரசு யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து மாநிலத் தலைவர், தேசியத் தலைவர்கள் முடிவு செய்வார்கள். திருவாரூர் மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் நோக்கத்தில்தான் செயல்பட்டு வருகிறோம்.
குறிப்பாக திமுகவில் இருந்து பிரிந்து அதிக தொண்டர்கள் பாஜகவில் இணைவது ஒரு எதிர்பாராத திருப்பமாக உள்ளது. இது ஸ்டாலினுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தான் திமுக எனும் கோட்டையை யாராலும் அசைக்க முடியாது என்று அவர் பேசி வருகிறார். அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை வரவேற்கிறோம்.
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதாக இருந்தால், அவரை எதிர்த்து தனித்து நின்று போட்டியிட்டு பாஜக அவரை முறியடிக்கும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க : 'முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை, ஆனால்...!' - வானதி சீனிவாசன்