கோடைகாலம்தான் நுங்கு, பதநீர், தர்பூசணிப் பழம், இளநீர் போன்றவற்றின் பொன்னான காலம். ஏப்ரல், மே போன்ற மாதங்களில் கடுமையான வெப்பத்தினால், இதன் விற்பனை களைகட்டும். கிராமப்புற வயல்களில் விளைந்த இவற்றை, நெடுஞ்சாலை ஓரங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் வியாபாரிகள் விற்பனை செய்யத் தொடங்குவர்.
ஆனால், சாலையோர வியாபாரிகளுக்கு இந்தக் கோடைகாலம் அப்படி அமையவில்லை. வேலை, கல்வி, சந்தையென வெளியே வரும் மக்கள்தான், அவர்களின் வாடிக்கையாளர்கள். இந்நிலையில், கரோனா அச்சுறுத்தலால், மக்கள் வெளியே வருவதில்லை. ஊரடங்கினால், சோர்ந்துபோனது அவர்களின் தொழில்.
இது குறித்து நுங்கு வியாபாரி பெரியசாமி, “கோடைகாலத்தில்தான் எங்களுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும். ஆனால், இந்தமுறை அதுவும் இல்லாமல் போனது. ஒரு மணிக்கு கடையை மூட அரசு உத்தரவிட்டது. ஆனால், 12 மணிக்கே விற்பனையை நிறுத்தச் சொல்கிறார்கள். அதற்குள் பெரிதாக விற்பனையும் ஆகவில்லை.
மரத்திலிருந்து வெட்டிய பிறகு, விரைவாக நுங்கினை விற்றால்தான், மக்களுக்குத் தரமான நுங்கு உண்ணக் கிடைக்கும். குறிப்பிட்ட நேரத்தில், வாங்க ஆளில்லை, அதனால் விற்கவும் முடியவில்லை. நுங்குகள் அனைத்தும் வீணாகின்றன” என வேதனைத் தெரிவிக்கிறார்.
பன நுங்கு மட்டுமில்லை, தர்பூசணி வியாபாரிகளும் இதே பிரச்னையைத்தான் சந்திக்கிறார்கள். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தர்பூசணி வியாபாரி மகேந்திரன், ”மே, ஜூன் மாதங்களில்தான் மக்கள், உடல் குளிர்ச்சிக்காக தர்பூசணிப் பழங்களை வாங்குவார்கள்.
ஆனால், இந்த மாதம் ஊரடங்கு அதை முற்றிலுமாகப் பாதித்துவிட்டது. ஏற்கனவே, நிறைய பழங்களை அழுகிய காரணத்தால், குப்பையில் கொட்டிவிட்டோம். 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை முதலீடு செய்து, வாங்கிய பழங்கள் அனைத்தும் வீணாகின்றன. எங்களுக்கு வாழ்வாதாரமே, இந்தத் தொழில்தான். இதுவும் இல்லையென்றால் என்னதான் செய்வது” என்றார்.
இளநீர் வியாபாரி பூபாலன் கூறும்போது, எப்போதும் ஓரளவு வியாபாரம் ஆகக்கூடிய தொழில்தான். கோடைகாலங்களில் நல்ல விற்பனையாகும், ஆனால் தற்போது ஊரடங்கினால், மொத்தமாகப் பாதித்துவிட்டது. மக்கள் நடமாட்டம் இல்லை. இளநீர் வியாபாரம் முற்றிலுமாக முடங்கிப் போய்விட்டது.
எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்தத் தொழிலை வைத்துதான் அவர்களைக் காப்பாற்றிவருகிறேன். இனி என்ன செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. உணவுக்கும் வழியில்லாமல், தொழிலுக்கு வந்தால், இளநீர் விற்பதில்லை” என்றார்.
ஊரடங்கு சாலையோரத் தொழிலாளிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. கோடைகால விற்பனைதான், அவர்களின் இருப்பைச் சாலைகளில் தக்கவைத்துவந்தது. இந்நிலையில், கோடையிலும் நஷ்டப்பட்டால் எதை வைத்து வாழ்வார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. தமிழ்நாடு அரசு அவர்களுக்கு தனிக்கவனம் எடுத்து உதவ வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சாலை வியாபாரிகளின் கோரிக்கையாகவுள்ளது.
இதையும் படிங்க: முகாமில் ஏற்பட்ட மனமாற்றம்... வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர ஆதரவற்றோர் கோரிக்கை!