திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மணவாளன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி (82). இவரது மனைவி நவநீதம். இவர்களுக்கு ஸ்டாலின் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில், இரவு நேரத்தில் வீட்டில் உள்ள பிரிட்ஜின் மின் இணைப்பை துண்டிப்பது வழக்கம். அதன்படி, நேற்று (மார்ச் 13) இரவு பிரிட்ஜின் மின் இணைப்பை துண்டித்துவிட்டு அதன் மேல் கொசுபத்தி ஏற்றிய பக்கிரிசாமி, அதன் அருகாமையில் உறங்கினார். அப்போது, கொசுபத்தி எரிந்து பிரிட்ஜின் மேல் இருந்த துணியில் பற்றி தீயாக எரியத்தொடங்கியது. இந்த துணி முழுவதுமாக எரிந்தவுடன் பிரிட்ஜ் வெடித்து சிதறியது. இதில் பக்கிரிசாமி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரிட்ஜ் வெடித்த சத்தம் கேட்டு மகனும் மனைவியும் எழுந்து பார்த்தபோது, பக்கிரிசாமி உடல் கருகி உயிரிழந்ததை பார்த்து கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், பக்கிரிசாமியின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து நன்னிலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.