திருவாரூர்: நாகப்பட்டினம் மாவட்டம், பாப்பாகோவில் தனியார் கல்லூரி பேருந்தை, காலையில் மாணவர்களை அழைத்துச்சென்று விட்டு, மாலையில் நன்னிலம் அருகே மணவாளம்பேட்டை பகுதியில் நிறுத்தி வைப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி அன்று வழக்கம் போல் மாணவர்களை அழைத்துச்சென்று விட்டு, மாலை பேருந்தை ஓட்டுநர் ராஜசேகரன், நன்னிலம் அருகே நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். தொடர்ந்து மறுநாள் (செப்.29) காலை வந்து பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தைக் காணவில்லை.
விசாரணை
இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் ராஜசேகரன், இது குறித்து நன்னிலம் காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் சுகுணாவிடம், புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் நன்னிலம் காவல் துறையினர் அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர்.
அதில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே திருக்கண்ணபுரத்தில் உள்ள முருகதாஸ் மகன் சத்திய ஸ்ரீராம் என்பவர் திருப்பூரில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக வீட்டில் இருந்ததும், அவரது கூட்டாளியான திருப்பூரைச் சேர்ந்த சிவகுமார் (23), அஷ்ரப் (22), சதீஷ் குமார் (23) ஆகியோர் சத்திய ஸ்ரீராம் வீட்டிற்குச் சென்றதும், பின்னர் அவர்கள் நான்கு பேரும் இணைந்து மணவாளம்பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் கல்லூரி பேருந்தை திருடிக்கொண்டு, திருப்பூரை நோக்கிச் சென்றதும் தெரியவந்தது.
கைது
இதையடுத்து திருப்பூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதேசமயம் திருச்சிக்கும் கரூருக்கும் இடையே உள்ள திருபாயத்துறை சுங்கச்சாவடி அருகே ரோந்து காவல் துறையினரை பார்த்ததும் பேருந்தை அங்கேயே நிறுத்திவிட்டு அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இந்நிலையில் நால்வரையும் கண்டுபிடிக்க நன்னிலம் காவல் துறையுனர் தனிப்படை அமைத்தனர். இதை அடுத்து திருப்பூர் சென்ற தனிப்படையினர், சத்திய ஸ்ரீராம், சிவக்குமார், அஸ்ரப், சதீஷ்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 10 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி: லாரியுடன் பறிமுதல்செய்த காவல் துறை