தமிழ்நாட்டில் கரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல்வேறு சிரமங்களுக்கிடையே விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்துப் பகுதிகளுக்கும் உரங்களை அனுப்பி வைத்து வருவது பாராட்டுக்குரியது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தனியார் உரக்கடை உரிமையாளர்கள் உரங்களை, பதுக்கி வைத்து திட்டமிட்டு, தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உரம் மூட்டைகளின் விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வந்தது. ஆகவே உரத்தை பதுக்குவோர் லைசென்ஸை அரசு ரத்து செய்ய வேண்டும்.
2011ஆம் ஆண்டுக்குப் பிறகு, வரும் ஜூன் 12இல் குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் இருப்பதை அறிந்து விவசாயிகள் நம்பிக்கையோடு எதிர் நோக்கி உள்ளோம். ஆனால், காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தினை அறியாமல் கோடை சாகுபடி என்கிற பெயரில் தமிழ்நாடு அரசு சட்டவிரோதமாக தண்ணீர் திறந்து வீணடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதை அரசு மறுக்கும் பட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம்" என எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கரோனா நோயாளிகளுக்கு தன் உயிரை பணையம் வைத்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மரணமடைவது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களின் உயிருக்கும், குடும்பத்திற்கும் அரசு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இறந்த மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய மறுத்து கலவரம் செய்தது மனிதநேயமற்ற செயல். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்" இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
இதையும் படிங்க: மருத்துவர்கள், அனைத்துக்கட்சிகள், சுகாதார வல்லுநர்களோடு ஆளுங்கட்சி ஆலோசிக்க வேண்டும்’