திருவாரூர்: 1.20 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி பணிகள் தீவிரமாக நடந்து வரும் நேரத்தில் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா, தாளடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பா, தாளடி நடவுப்பணி தொடங்குவதற்குமுன், அடி உரமாக யூரியா, பொட்டாசியம் தெளிக்க வேண்டிய நேரத்தில் கூட்டுறவு சங்கங்கள், தனியார் உரக்கடைகளிலும் உரத்தட்டுப்பாடு நிலவி வருவதால் விவசாயிகள் உரம் தெளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது;'திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 1.20 லட்சம் ஏக்கர் நிலங்களில் சம்பா, தாளடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நடவுப்பணிகள் தொடங்குவதற்கு முன், அடி உரமாக யூரியா பொட்டாசியம் போட வேண்டிய நேரத்தில் கூட்டுறவு சங்கங்களில் சென்று கேட்டால் போதுமான அளவு உரங்கள் இருப்பு இல்லை என்று கூறி அலைக்கழிக்கின்றனர்.
தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால் பயிர்களுக்கு உரங்கள் போட்டால் மட்டுமே மழைக்காலங்களில் தாங்கி நிற்கும். நேரம் தாண்டி உரங்கள் தெளித்தால் பயனில்லாமல் போய்விடும்' எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து வேளாண்துறை இணை இயக்குநர் சிவக்குமாரிடம் கேட்டபோது, '40-ஆயிரம் மெட்ரிக் டன் உர மூட்டைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது'எனக் கூறினார்.
அதேசமயம், மாவட்டம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்காமல் தவித்து வரும் நிலை தான் உள்ளது. இதனால் வேளாண்துறை அலுவலர்களும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுத்து கூட்டுறவு சங்கங்களில் போதுமான இருப்பு வைத்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உர மூட்டைகள் கிடைப்பதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மேல் வருவாய் ஈட்டும் பி.டெக் முடித்த ஹை-டெக் விவசாயி...!