திருவாரூர்: தமிழ்நாட்டில் தை மாதம் என்பது நெற்பயிர் அறுவடை காலம் ஆகும். அதுபோல, திருவாரூரில் இந்த வருடம் சுமார் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெற்பயிற்சாகுபடி செய்திருந்தனர். மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்தது. தாளடி நெற்பயிர்கள் 60 நாட்களைக் கடந்த பயிராக இருந்து வந்தது.
பெரும்பாலான விவசாயிகள், பொங்கல் நெருக்கத்தில் அல்லது பொங்கல் முடிந்தவுடன் அறுவடைப் பணிகளில் ஈடுபடுவதற்கு தயாராக இருந்தனர். இந்த நிலையில், கடந்த ஜனவரி 7ஆம் தேதி காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை என தொடர்ந்து 24 மணி நேரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 91 சென்டி மீட்டர் மழை அளவு பதிவானது. குறிப்பாக, மாவட்டத்திலேயே அதிகபட்சமாக திருவாரூரில் 21 சென்டி மீட்டர், நன்னிலத்தில் 16 சென்டி மீட்டர் மழை அளவும் பதிவானது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள், வயலில் தேங்கிய மழைநீரில் மூழ்கியது.
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் இளவங்கார்குடி, பெரும்புகலூர், பவித்திரமாணிக்கம், திருக்கனமங்கை, வண்டாம்பாலை, நன்னிலம், அதம்பார், கடம்மங்குடி, கீழ மணலி, நாகராஜன்கோட்டகம், ஓகை, பேரையூர் போன்ற பல்வேறு பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள், கனமழையின் காரணமாக மழை நீரில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மழையானது அடுத்தடுத்த நாட்கள் விட்ட போதும், வாய்க்கால், வடிகால் போன்றவற்றில் தண்ணீர் நிரம்பி இருந்ததால், வயலில் இருந்த தண்ணீரை வடிய வைக்க முடியாத சூழ்நிலையில் விவசாயிகள் சிக்கித் தவிக்கின்றனர். இதனால் வேளாண் அதிகாரிகள் பாதிப்புக்குள்ளான பகுதிகளை உடனடியாக பார்வையிட்டு, தங்களுக்குரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக விவசாயி கதிரவன் கூறியதாவது, “ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 30 - 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து சாகுபடியில் ஈடுபட்டோம். தற்போது தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்தாலும் ஈரப்பதம் அதிகரித்து காணப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும், ஈரப்பதத்தை காரணம் காட்டி அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய மறுத்து விடுவார்கள். ஆகையால், அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு.. நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு!