திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முழுவதும் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது சம்பா சாகுபடிக்காக நிலத்தை உழுதல், நேரடி நெல் விதைப்பு உள்ளிட்ட பணிகளில் உழவர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
குறுவை சாகுபடிக்காக உழவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தால் பல உழவர்கள் பயன் பெற்றுவந்தனர். குறுவை சாகுபடியைப் போல், இந்த ஆண்டிற்கான சம்பா சாகுபடிக்கும் சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என உழவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது குறித்து, பேசிய திருவாரூர் உழவர்கள், "இந்தாண்டு குறுவை அறுவடைப் பணிகள் முடிந்து சம்பா சாகுபடிக்கான பணிகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
உடனே வேண்டும் மானியம்
தமிழ்நாடு முதலமைச்சர் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்ததில் 70 விழுக்காடு உழவர்கள் மட்டுமே பயனடைந்தனர், மீதமுள்ள 30 விழுக்காட்டினர் பயனடையவில்லை. காரணம், குறுவைப் பணிகள் முடியும் தருவாயில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டதால் பல உழவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
எனவே காலம் தாழ்த்தாமல் சம்பா பணிகள் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் சம்பாவிற்கான சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் உழவு மானியம், உர மானியம், விதை மானியம் உள்ளிட்டவையை உடனடியாக அறிவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.