திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சுற்றியுள்ள 213 கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் நல சங்கத் தலைவர் சேதுராமன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் சேதுராமன் கூறியதாவது, "நன்னிலம், அதன் சுற்றுவட்டார 213 கிராமங்களில் இன்சூரன்ஸ் தொகை, பெயர் பட்டியலில் இடம் பெறாததால் விவசாயிகள் அனைவரும் பெரும் வேதனையில் இருந்து வருகின்றோம். பயிர் காப்பீட்டு நிறுவனங்களின் அடாவடித்தனத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். பயிர் காப்பீட்டு நிறுவனத்தில், அனுபவமில்லாத காண்ட்ராக்ட் ஒப்பந்ததாரர்கள் வைத்து சரியான முறையில் மகசூல் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
இதனால் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்காமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதில் ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே சொற்ப அளவிலான இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக அனைத்து விவசாயிகளுக்கும் சரியான முறையில் கணக்கெடுப்பு நடத்தி பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை ஒன்றிணைத்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் மத்திய அரசைக் கண்டித்து மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்