திருவாரூர்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசரக் கூட்டம் திருத்துறைப்பூண்டியில் இன்று (ஜனவரி 2) நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்., பாண்டியன் பங்கேற்று பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மத்திய அரசு விவசாயிகளுடைய போராட்டத்தையும், உயிரிழப்புகளையும் மதிக்க தவறுகிறது. விவசாயிகள் கழிவறைகளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்வது, உலக அரங்கில் இந்திய அரசு வெட்கித் தலை குனியும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் இறப்புக்கு பிரதமர் மோடி பொறுப்பு ஏற்க வேண்டும். 4ஆம் தேதி நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்கு எதிரான சட்டம் கைவிடப்படும் என்ற உத்தரவாதத்தை பிரதமர் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். புரெவி, நிவர் புயல் தாக்குதலால், தமிழ்நாடு விவசாயிகளின் பெரும் பொருட்செலவில் விவசாய உற்பத்தி மேற்கொண்டுள்ளனர். விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு, நடப்பு ஆண்டு நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2500 என நிர்ணயம் செய்து நெல் கொள்முதல் செய்ய முன்வர வேண்டும்.
2012ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் இயற்கை சீற்றங்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அழிவை சந்தித்த விவசாயிகள், மறு உற்பத்தி செய்ய முடியாத நிலையில் பொருளாதார பின்னடைவிற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை உணர்ந்து தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஜனவரி 9ஆம் தேதி வேதாரண்யம் உப்பு சத்தியா கிரக நினைவு இல்லத்திலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தஞ்சை ராஜராஜசோழன் நினைவிடத்தை நோக்கி நெடும் பயணம் மேற்கொள்ள உள்ளனர். வழியில் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம் மயிலாடுதுறை திருவாரூர் தஞ்சாவூர் நகரங்களில் விவசாயிகள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர்களிடத்தில் கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். இப்பயணத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர் எனக் கூறினார்.
இதையும் படிங்க: பயிர் காப்பீட்டுத் தொகை வெறும் 500 ரூபாய் மட்டுமே கிடைத்ததால் விவசாயி தற்கொலை