திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில், பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பருத்திக்கான சாகுபடி பணிகள் தொடங்க உள்ள நிலையில், நெல்லிற்கு அரசின் சார்பில் இயங்க கூடிய நேரடி கொள்முதல் நிலையங்கள் இருப்பது போல, பருத்திக்கும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, “திருவாரூர் மாவட்டம் முழுவதும் கோடை சாகுபடியாக பருத்தி பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை. பருத்தி கொள்முதல் செய்வதற்கு மூங்கில்குடிலில் ஒருங்கிணைந்த வேளாண் கூட்டுறவு கொள்முதல் மையம் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.
![விவசாயிகள் கோரிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-01-cotton-centre-open-farmers-vis-script-tn10029_07052021142127_0705f_1620377487_142.jpg)
விவசாயிகள் 20 கிலோ மீட்டர் தூரம் சென்று தங்களுடைய பருத்திகளை விற்பனை செய்து வருவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் உள்ளோம். விற்பனைக்கு கொண்டு வரும் பருத்தி மூட்டைகளை பத்து நாள்களுக்கு மேலாக வெயில், மழை என பாராமல் சாலையோரங்களில் அடுக்கி வைத்து காத்திருந்து விற்பனை செய்து வரும் அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளின் மையமாக உள்ள பேரளத்தில் அரசின் சார்பில் பருத்தி கொள்முதல் நிலையம் ஒன்று திறந்து அதன் மூலம் விவசாயிகளிடமிருந்து பருத்திகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
![விவசாயிகள் கோரிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-01-cotton-centre-open-farmers-vis-script-tn10029_07052021142127_0705f_1620377487_1080.jpg)
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலின், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பருத்திக்கு உரிய விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் நிலையம் திறந்து அதன் மூலமாக பருத்திகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவால் ஒரே நாளில் 4,187 பேர் பலி